தமிழகத்தின் முதல் கருவாட்டு சந்தை..! நூற்றாண்டு கடந்த மயிலாடுதுறை மண்ணின் அடையாளம்..!


நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையின் தெற்கு நுழைவுவாயில் ரயில்வே ஜங்சன் மேம்பாலம்., ஞாயிற்றுக்கிழமை மயிலாடுதுறை மேம்பாலத்தை கடப்பவர்கள் அனைவரையும் ஒரு கனம் மெய் மறக்க வைக்கிறது கருவாட்டு மனம். 

 

தமிழகத்தில் முதலாவது கருவாட்டுச் சந்தையாக தொடங்கப்பட்ட மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை., நூற்றாண்டை கடந்து இன்னமும் தன் இயல்பைத் தொலைக்காமல் கருவாட்டுப் பிரியர்களை கவர்ந்திழுத்து வைத்திருக்கிறது.

 

நெத்திலியில் ஆரம்பித்து வாளை, கொண்டா, கெழுத்தி, வஞ்சிரம் என அனைத்துவகைக் கடுவாடுகளையும் இங்கே தேடிப் பிடிக்கலாம். பாறை, வாளை உள்ளிட்ட கருவாடுகள் கிலோ ரூபாய் நூறுக்கும் மற்ற இடங்களில் காஸ்ட்லி யாக விற்கப்படும் கருவாடுகள் விலை குறைவாகவும் இங்கு சில்லறை வியாபாரத்திலேயே கிடைக்கிறது.

 

சுட்டுப்போட்ட ஒரு கருவாடு இருந்தால் போதும், கவளம் கவளமாக உள்ளே போகும் பழைய சோறு. கஞ்சியும் கருவாடும் உடல் உழைக்கும் வர்க்கத்தின் உற்ற தோழன். ஆனால், இந்தக் காலத்துப் பிள்ளைகளிடம் 'கருவாடு' என்று சொன்னால் கூகுளைத் தேடுவார்கள். 

அந்தளவுக்குக் கருவாட்டுத் தேடல் இப்போது குறைந்துவிட்டது. என்றாலும், மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தைக்கு இன்னும் மார்க்கெட் குறையவில்லை.

 

பழையாறு, திருமுல்லைவாசல், தென்னாம் பட்டினம், கோணயாம்பட்டினம், வாணகிரி, பூம்புகார், சின்னங்குடி, தரங்கம்பாடி, நாகூர், நாகப்பட்டினம், செருதூர், வேளாங்கண்ணி, வெள்ளப்பள்ளம், வானவன்மாதேவி, ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், வேதாரண்யம், கோடியக்கரை என இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மீன்பிடித் தளங்கள் கொண்டு 135 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்ட கடற் கரையைக் கொண்டது நாகை மாவட்டம். 

 

கடற்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கிறது மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை. அனைத்து மீனவர்களுக்கும் பொது வான ஒரு இடமாகவும் வெளியூர் வியாபாரிகள் எளிதில் வந்துபோகும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நூறு வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் இந்தச் சந்தையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

ரயிலடிக்கு பக்கத்திலேயே சித்தர்காட்டில் அமைந்திருக்கும் இந்தச் சந்தை ஞாயிற்றுக் கிழமை ஒருநாள் மட்டுமே கூடுகிறது. அன்று மட்டும் சர்வசாதாரணமாய் ஐயாயிரம் பேர் இந்தச் சந்தையைக் கடக்கிறார்கள்; சுமார் 5 லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.சனிக்கிழமை பின் னிரவு இரண்டு மணிக்கே வியாபாரம் தொடங்கி விடும் என்பதால் சனிக்கிழமை மாலையே வியாபாரிகள் இங்கு வந்துவிடுகிறார்கள். 

 

மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங் களைச் சேர்ந்த கருவாட்டு வியாபாரிகள் இங்கு வியாபாரத்துக்கு வருகிறார்கள். இரண்டு மணிக்குத் தொடங்கி அதிகாலை ஆறு மணிக்குள் மொத்த வியாபாரத்தை முடித்துக் கொண்டு பெரிய வியாபாரிகள் மூட்டையைக் கட்டிவிடுகிறார்கள்.

அடுத்தகட்ட சிறு வியாபாரிகள் காலை ஐந்து மணிக்கு கடை விரித்து காலை பத்து மணிவரை முட்டி மோதுகிறார்கள்.  மாலை வரைக்கும் சில்லறை வர்த்தகம் களைகட்டுகிறது. 

 

சந்தைகூடும் இடமானது அறநிலையத் துறைக்கு சொந்தமானது. அவர்களால் ஆண்டுக் குத்தகைக்கு விடப்படுகிறது. இங்கே சந்தை நடத்த நகராட்சிக்கும் தனியாக வரி செலுத்த வேண்டும். அறநிலையத் துறையும் நகராட்சியும் இதையெல்லாம் கணக்குப் போட்டு வசூலித்துக் கொண்டாலும் சந்தைக்குத் தேவையான எந்த அடிப்படை வசதியையும் செய்து கொடுக்க வில்லை.

 

தங்கள் கஷ்டங்களை பட்டியல் போட தொடங்கினர்கள் கருவாடு வியாபாரிகள் :  

 

“கருவாட்டை எடுத்துக்கிட்டு ராத்திரியே இங்கே வந்துடுறோம். ஆனா, இங்க தங்குறதுக்கு எந்த வசதியும் இல்ல. ரயில்வே ஸ்டேஷன்லதான் படுத்துக்க வேண்டியிருக்கு. வியாபாரிங்க முதல் நாள் ராத்திரி வந்து மறுநாள் சாயந்தரம்தான் வீட்டுக்குப் போறோம். அதுக்கு நடுவுல அவசர ஆத்தரத்துக்கு ஒதுங்கக்கூட இடமில்லாம படாதபாடு பட்டுப்போறோம்யா.” என்கின்றனர்.

 

நூறாண்டு பாரம்பரியம் கொண்ட மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தையில் கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது கூட பரவாயில்லை கருவாடு விற்க வரும் வியாபாரிகளே சொந்த செலவில் கொட்டகை அமைத்து  வியாபாரம் பார்க்க வேண்டும். அவர்களுக்கென கட்டிட வசதியும் இல்லை.

 

அடிப்படை வசதி இல்லை என்ற போதிலும்., கருவாடு வியாபாரிகளிடம் கட்டணம் வசூலித்த அறநிலையத்துறை அதிகாரி கோவிந்தராஜிடம் கேட்டோம் 

 

"சந்தையின் அடிப்படை வசதியை மேம்படுத்த , போதிய நிதி இல்லை என்றும்., கடைக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படுவதால் சந்தையை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகவும்" தெரிவித்தார். 

 

நூறாண்டு பாரம்பரியமும்., கருவாட்டை நம்பி பிழைப்பு நடத்தும் வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகிவிட்ட நிலையில்., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மயிலாடுதுறை நகர வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.